திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாதப் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலையில், மலையையே சிவனாக பாவித்து பக்தர்கள் வழிபாடுகின்றனர். இதனால், மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவுகொண்ட கிரிவலப் பாதையில், ஒவ்வொரு மாத பவுர்ணமி தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் வருவது வழக்கம்.

அந்த வகையில், ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, பவுர்ணமி திதியானது நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.32 மணிக்குத் தொடங்கி, நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணி வரை நீடிக்கிறது. இந்த இடைப்பட்ட கால அவகாசத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி பவுர்ணமியை முன்னிட்டுப் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version