திருவள்ளூர் மாவட்டம், கொமக்கம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.

பழமை வாய்ந்த இந்த ஆலயத்தைப் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்வதற்கான வழிபாடுகள் கடந்த 29-ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் பந்தல்கால் நடுதலுடன் தொடங்கின. தொடர்ந்து, ஜூன் 3-ஆம் தேதி புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள் யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அன்று கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் மூலவர் செல்லியம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்று (ஜூன் 4) அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, ஸ்ரீ காளிகா காயத்ரி ஹோமம், மகா பூர்ணாஹீதி மற்றும் நாடி சந்தனம் உள்ளிட்ட ஆன்மீக சடங்குகள் பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டன.

காலை 9 மணி அளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரகாரமாகச் சுமந்து வந்தனர். பின்னர், விநாயகர், மூலவர் செல்லியம்மன் விமான கோபுரம், நவக்கிரகம், சிம்மம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றுக்குத் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

கோவிலைச் சுற்றிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மூலவர் செல்லியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்குத் தேவையான பிரசாதங்கள் மற்றும் அன்னதான உதவிகளை விழா குழுவினரும், கொமக்கம்பேடு கிராம பொதுமக்களும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version