கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகுந்த பக்தி சூழலில் நடைபெற்று வருகிறது. கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, வரும் 30-ஆம் தேதி வரை 10 நாட்கள் நீடிக்கிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனைகள், அன்னதானம், வாகன பவனிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் பக்தர்களை ஈர்த்து வருகின்றன.
திருவிழாவின் 4-ஆம் நாளான நேற்று காலையில் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை நேரத்தில் திருவாவடுதுறை ஆதின மண்டகப்படி நிகழ்ச்சியும், சிறப்பு நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றன. இரவில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்று பக்தர்களை மகிழ்வித்தது. இதனைத் தொடர்ந்து, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். மேளதாளங்கள் முழங்க, வீதி உலா வந்த அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோயிலில் இருந்து புறப்பட்ட வாகன பவனி சன்னதி தெரு, கன்னியம்பலம் மண்டபம், தெற்கு ரத வீதி, நடுத்தெரு, பிள்ளையார் கோயில் தெரு, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி ஆகிய பகுதிகளைச் சுற்றி மீண்டும் கன்னியம்பலம் மண்டபத்தை வந்தடைந்தது. அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சன்னதி தெரு வழியாக கோயிலுக்குத் திரும்பினார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து “திருக்கணம்” சாத்தி வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் ஆனந்த், பகவதி அம்மன் திருக்கோயில் பக்தர்கள் சங்கத் தலைவர் சிவகுமார் நாகப்பன், செயலாளர் நாயகம், பொருளாளர் பப்பு உள்ளிட்டோர் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழாவின் 5-ஆம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் சென்னை திரைப்பட தயாரிப்பாளர் கே.எல். போஸ் சார்பில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
காலை 11 மணிக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு புஷ்ப அபிஷேகமும், அதன் பின்னர் பக்தி பஜனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இந்த வைகாசி விசாகத் திருவிழா கன்னியாகுமரியின் பக்தி பெருக்கு மற்றும் கலை-கலாச்சாரப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அம்மனின் அருளைப் பெற இந்த நாட்களில் கோயிலுக்கு வருகை தருவதால் பகுதி முழுவதும் பக்தி சூழல் நிலவுகிறது.

