ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா முனீஸ்வரர் திருக்கோவிலில் அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து தினசரி மண்டல பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன.
மண்டல பூஜையின் நிறைவு நாளை முன்னிட்டு இன்று 108 பால்குட ஊர்வலம் திருக்கோவில் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் வளாகத்தில் 108 பால்குடங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி கோவில் வளாகத்தில் இருந்து காந்தி ரோடு, சுப்பாராவ் தெரு, பைராகி மடத் தெரு, சித்தூர் ரோடு மற்றும் சர்ச் ரோடு வழியாக ஊர்வலமாகச் சென்று மகா முனீஸ்வரர் திருக்கோவிலை அடைந்தனர்.

அங்கு சுவாமிக்கு 108 பால்குடங்களால் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பல்வேறு வகையான நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம் மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் சோமசமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்வின் நிறைவாக திருக்கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

