ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி–தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி மாத பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வைரவேல், சேவல் கொடி மற்றும் தங்க ஆபரண அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆடி பரணி–கிருத்திகை தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை, வேலூர், ஆற்காடு, வாலாஜா, கலவை, திமிரி, பூட்டதாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டனர். பலர் காவடி ஏந்தியும், வேல் குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி முருகப்பெருமானை பக்தியுடன் வழிபட்டனர்.
மலை உச்சியில் அமைந்துள்ள கோவிலை அடைய சுமார் 500 படிகளை ஏறிய பக்தர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து “அரோகரா, அரோகரா” என்ற பக்தி முழக்கங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணிகளில் காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டதால் ரத்தினகிரி மலைப்பகுதி முழுவதும் ஆன்மிக எழுச்சி மற்றும் பக்தி பரவசம் நிறைந்த சூழல் நிலவியது.

