திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் ஒன்று தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம். இந்த ஆலயத்தில் வருடா வருடம் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான 141-வது ஆண்டுத் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. விழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை பவனி, திருப்பலி நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று இரவில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் ஜி.ஏ.அனஸ்தாஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை, திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர் பவனி நடந்தது. இதனை தர்மகர்த்தா மரியராஜ் ஆசிரியர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான கிறிஸ்தவர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர்.

சென்னை, மும்பை, கேரளம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். தேர் பவனியானது ஆலயத்தை சுற்றியுள்ள ரதவீதிகள் வழியாக வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. 10-ம் நாளான இன்று அதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

Share.
Leave A Reply

Exit mobile version