சென்னையில் உள்ள பேராலயங்களில் புகழ்பெற்றது சாந்தோம் புனித தோமையார் பேராலயம். இங்கு நாள்தோறும் நூற்றுகணக்கானோர் திருப்பலியில் கலந்து கொள்கின்றனர். பல வேண்டுதல்களை முன்வைத்து உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த பேராலயத்திற்கு வருகை தருகின்றனர்.
இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் நடத்தினார். நேற்று தொடங்கிய இந்த பெருவிழா, வருகிற 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, இன்று (வியாழக்கிழமை) குடும்ப விழாவாக நடக்கிறது. இதனையொட்டி மாலை 5.30 மணிக்கு பாதிரியார்கள் இக்னேஷியஸ் தாமஸ், ஐசக் பால், கிரித் மேத்தியூஸ், ஜோ நிர்மல் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நடத்த இருக்கிறார்கள். நாளை (வெள்ளிக்கிழமை) நற்கருணை பெருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கும் சிறப்பு திருபலியில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கி, நவநாள் ஜெபம், நற்கருணை பவனி மற்றும் ஆசீர் வழங்குகிறார்.
நாளை மறுதினம் (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு பெங்களூரு உயர் மறைமாவட்ட துணை ஆயர் சூசைநாதன் தலைமையில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவில் பாதிரியார்கள் அருளப்பா, அருள்ராஜ், அந்தோணி, பெர்னார்ட் லாரன்ஸ், வின்சென்ட் சின்ன துரை ஆகியோர் பங்கேற்று சிறப்பு திருப்பலியை நடத்த இருக்கிறார்கள்.
