ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு மோட்டூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா, இரண்டு நாட்கள் மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றது. அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகப் போற்றப்படும் இக்கோவிலில், ஊர் செழிக்கவும், விவசாயம் தழைக்கவும், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் வேண்டி இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, முதல் நாள் விழாவில் கிராம மக்கள் அனைவரும் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினர். பின்னர், தங்கள் நிலங்களில் விளைந்த புதிய நெல் மற்றும் தானியங்களைக் கொண்டு, கோவில் வளாகத்தில் வரிசையாகப் பொங்கலிட்டு அம்மனுக்குப் படையலிட்டனர். தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இரண்டாம் நாளான இன்று, அம்மனுக்குப் பூகரகம் சோடித்து, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்குக் கூழ்வார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பல வண்ண மலர்களால் தாராளமாக அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட மரத்தேரில் ஸ்ரீ கங்கையம்மன் எழுந்தருளினார்.

அம்மன் தேரில் ஏறியதும், கூடியிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பக்தி கோஷங்களை முழங்கியபடி தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகத் தேர் வலம் வந்தபோது, வீடுகள் தோறும் பொதுமக்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இத்திருவிழாவை மேலும் மெருகூட்டும் வகையில் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், சுருள் கத்தி வீச்சு, புலியாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கொக்கிலியாட்டம் ஆகியவை ஆங்காங்கே அரங்கேறின. கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பல்வேறு விதமான வேடங்களை அணிந்துகொண்டு, மேள தாளங்களுக்கு ஏற்ப உற்சாக நடனமாடி திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version