திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாய்பாபா திருக்கோவிலில் குரு பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி அதிகாலை 6 மணியளவில் காகட் ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் கைகளால் சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் ஹோமக் குண்டம் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் மற்றும் ஸ்ரீ சாய்நாதரின் அருள் வேண்டி மகா சங்கல்ப பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், சத்ய நாராயண பூஜையும் சிறப்பாக நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் மகா ஆரத்தி நடைபெற்றதையடுத்து, கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பெரியபாளையம், குமரப்பேட்டை, ஆரணி, தண்டலம், வடமதுரை, புதுவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாய்பாபாவை தரிசித்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு பல்லக்கு சேவையும், இரவு 8 மணிக்கு சிறப்பு ஆரத்தியும் நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உதயகுமார் தலைமையில் ஸ்ரீ சிவ சாய் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version