பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கோயில் வளாகம் மற்றும் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிகள் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் மட்டும் 78,709 பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்தனர். இதில் 31,312 பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாகத் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் அன்றைய ஒரு நாள் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.4 கோடியே 76 லட்சம் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், அன்றைய தினம் 3 லட்சத்து 97 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. பக்தர்களின் வசதிக்காகத் தேவஸ்தானம் சார்பில் இடைவிடாது அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2 லட்சத்து 26 ஆயிரம் பக்தர்கள் 3 வேளை அன்னப்பிரசாதம் அருந்தியுள்ளனர்.
கூட்ட நெரிசல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட 2,939 பக்தர்களுக்குத் தேவஸ்தான மருத்துவக் குழுவினர் மூலம் உடனடியாக மருத்துவச் சேவைகளும் வழங்கி முதலுதவி செய்யப்பட்டுள்ளது.தற்போது வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் பக்தர்களால் முழுமையாக நிரம்பியுள்ளன. இதனால் நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்’ (Time Slot Tokens) டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக வரும் இலவச தரிசன பக்தர்கள் (சர்வதரிசனம்) சாமி தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாகக் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
பக்தர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு குடிநீர், மோர் மற்றும் குழந்தைகளுக்கான பால் விநியோகத்தை தேவஸ்தான நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.
