திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், இலவச தரிசன டோக்கன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவசமாக தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக திருப்பதி கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த 7-ம் தேதி 80,706 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று 82 ஆயிரத்து 172 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 978 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடியே 15 லட்சம் செலுத்தப்பட்டு இருந்தது.

பக்தர்களுக்கு சுமார் 4லட்சத்து 25 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 57 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னபிரசாதமும், 3 ஆயிரத்து 234 பேருக்கு மருத்துவச் சேவையும் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருப்பு வரிசையானது சிலாத்தோரணம் வெளியே வரை நீண்டிருந்தது. சர்வ தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் சர்வதரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், திருப்பதியில் வழக்கமாக வழங்கப்படும் இலவச சர்வதரிசன டோக்கன்கள் மற்றும் திவ்ய தரிசன டோக்கன்கள் நேற்று வழங்கப்படவில்லை. இந்த டோக்கன்கள் இன்றைய (வியாழக்கிழமை ஜூலை 9) தரிசனத்திற்கானவை. எனவே, இன்று இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், நேரடியாக திருமலைக்கு செல்லலாம். அதேசமயம் நாளை வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கான டோக்கன்கள் வழக்கம் போல் இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version