மொரட்டாண்டி சனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் குரு பகவானுக்கு 9 வகையான வாசன திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

புதுச்சேரி: ஜோதிட சாஸ்திரப்படி, குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அத்தகைய குரு பகவான் இன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சரியாக காலை 11:07 மணிக்கு பிரவேசம் செய்தார். இதனையொட்டி புதுச்சேரிக்கு அருகிலுள்ள மொரட்டாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள குரு பகவான் சன்னதியில் குரு பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் ஏராளமான பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை முதலே ஆலயத்துக்கு வரத் தொடங்கிய பக்தர்கள் கூட்டம் மாலை வரை தொடர்ந்தது. குரு பகவானுக்கு 9 வகையான வாசன திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் 1008 லிட்டர் பால், 108 லிட்டர் நெய், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு புனித பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஆராதனைகளும், மந்திர உச்சாடனங்களும் இடைவிடாது ஒலித்தன.

பக்தர்கள் அனைவரும் நெய் விளக்கு ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். குரு பகவானின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்த பக்தர்களுக்கு பின்னர் இனிப்பு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆலயம் முழுவதும் பக்தர்களின் பக்தி முழக்கம் எதிரொலித்தது. இது குறித்து ஆலய குருக்கள் சீதாராமன் குருக்கள் கூறுகையில், “குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இன்று 11:07 மணிக்கு நுழைந்தார். இந்த குரு பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல யோகங்களையும், சுப பலன்களையும் தரும். குறிப்பாக, தொழில், கல்வி, திருமணம், சந்தான பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எனவே அனைவரும் குரு பகவானை வழிபட்டு அவரது அருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

குரு பெயர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். சனீஸ்வரன் மற்றும் குரு பகவானின் அருளால் அனைவருக்கும் நலம் பலிக்கட்டும் என பக்தர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த விழாவை ஒட்டி ஆலயத்தில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய சிறப்பு விழாக்கள் மூலம் பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version