திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் ஆனி பிரம்மோற்சவ விழாவின் 10-ஆம் நாளையொட்டி, அய்யங்குளம் கரையில் பாரம்பரிய தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில், ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஒன்பது நாட்களாக விநாயகர், சந்திரசேகரர், சின்ன நாயகர், சின்ன நடராஜர் மற்றும் பராசக்தி அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 10-ஆம் நாளான இன்று, அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் எழுந்தருளி ஊர்வலமாக அய்யங்குளம் கரையை வந்தடைந்தார். அங்கு சிவாச்சாரியார்கள் சூலத்தை குளத்தில் மூன்று முறை மூழ்கடித்து, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தினர்.
இந்த புனித தீர்த்தவாரி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து வழிபட்டனர். திருவண்ணாமலையில் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற இந்த விழா பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
