ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தான வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ தர்ப்பார்ண்யேஸ்வரர், பிராணம்பிகை இந்திர வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம். நவக்கிரக தலங்களில் ஸ்ரீ சனிஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்கும் தலமாகவும் திகழும் இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ தர்ப்பார்ண்யேஸ்வரர், பிராணம்பிகை இந்திர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஸ்ரீ தர்ப்பார்ண்யேஸ்வரர், பிராணம்பிகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதியுலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வரும் 27ம் தேதி திருத் தேரோட்டமும், வரும் 28ம் தேதி ஸ்ரீ சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

