விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நடைபெற உள்ள ஆடிப்பூர திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு 16 சக்கர சப்பர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், நகரின் முக்கியமான 4 ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என போற்றப்படும் ஸ்ரீ ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூர திருவிழா, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ள தேரோட்டத்துடன் சிறப்புப் பெற உள்ளது. இதையொட்டி இன்று கோவில் வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் இருவரும் 16 சக்கர சப்பர தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிந்தா… கோவிந்தா… என்ற பக்தி முழக்கத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
நான்கு ரத வீதிகள் வழியாக சென்ற சப்பர தேர், பின்னர் பாதுகாப்பாக தேர் நிலையத்தை வந்தடைந்தது. ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளதால், கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

