நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதான ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், நீடாமங்கலம் அருகிலுள்ள ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் ஆலயம், நாடெங்கும் புகழ்பெற்ற குரு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு குரு பகவானாக அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதியானது, ஜோதிட ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயம் நவக்கிரகங்களில் குரு தோஷ நிவர்த்திக்கு சிறப்பான தலமாகப் போற்றப்படுவதால், ஆண்டுதோறும் குருபெயர்ச்சி நாளில் ஏராளமான பக்தர்கள் குவிவது வழக்கம்.

இன்று (மே 26) காலை 11 மணியளவில் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம்பெயர்ந்தார். இந்த நிகழ்வை முன்னிட்டு ஆலயத்தில் அதிகாலையிலிருந்தே பக்தர்கள் பெருந்திரளாகத் திரண்டனர். சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் என பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. குருபெயர்ச்சி நிகழ்ந்த உடனேயே மகா தீபாராதனை நடைபெற்றபோது, “குரு திருவடி சரணம்! குருவே சரணம்!” என்ற பக்தர்களின் உரத்த கோஷம் ஆலயத்தை அதிரச் செய்தது.

நவக்கிரகங்களில் சுபகிரகமான குரு, ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறும் போது ஜோதிடத்தில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இம்முறை கடக ராசியில் பிரவேசிக்கும் குரு, மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஏழு ராசியினருக்கு சாதகமான பலன்களை அளிக்கக் கூடும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இவர்கள் தங்கள் ஜென்ம ராசிக்கு ஏற்ற பரிகாரங்களைச் செய்து, கல்வி, தொழில், திருமணம் உள்ளிட்ட தடைகளை நீக்கி நற்பலன்களைப் பெறலாம்.

ஆலயத்தின் மூலஸ்தான பிரகாரத்தில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் வீற்றிருக்கும் குரு பகவான், பிரகஸ்பதி தோஷம் உள்ளிட்ட நவக்கிரக தோஷங்களைப் போக்கி அருள்புரியும் சக்தி வாய்ந்தவர். கல்வியில் சிறப்பு, தொழில் முன்னேற்றம், திருமணத் தடை நீக்கம், குடும்ப நலன் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்கும் இவரது தரிசனத்திற்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டதால் ஆலயம் பக்தி மயமாகக் காட்சியளித்தது.ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், குருபெயர்ச்சியை முன்னிட்டு மே 28 முதல் ஜூன் 4 வரை தினசரி லட்சார்ச்சனை, சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. இக்காலக்கட்டத்தில் வரும் பக்தர்கள் குரு அருளை முழுமையாகப் பெறலாம் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த குருபெயர்ச்சி பல ராசியினருக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றம் மற்றும் செழிப்பைத் தரும் என ஜோதிடர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆலங்குடி குரு ஆலயம் இன்றும் லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்குரிய திருத்தலமாக திகழ்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version