இன்று ஆனி மாத அமாவாசை செவ்வாய்க்கிழமையுடன் இணைந்து வருவது பலருக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சாஸ்திரங்களின்படி அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு ஏற்ற நாளாகும். இன்று பித்ருக்களை நினைவுகூர்ந்து செய்யப்படும் வழிபாடுகள் அவர்களை திருப்திப்படுத்துவதோடு, குடும்பத்துக்கு நல்ல ஆசிகளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.
புண்ணிய தலங்களான கும்பகோணம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பலர் புனித நதிகளிலும், குளங்களிலும் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தர்ப்பணம் செய்வதால் பித்ரு தோஷங்கள் நீங்கி, பாவங்கள் குறைந்து, வாழ்க்கையில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. நீர்நிலைக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் புகைப்படங்களுக்கு மலர்கள் சூட்டி, தீபம் ஏற்றி, தூபம் காட்டி வழிபட்டனர்.
மேலும், இன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், பசுக்களுக்கு அகத்தி கீரை ஊட்டுவதும் சிறப்பு. இத்தகைய தானங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், செல்வ செழிப்பையும் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
செவ்வாய் அமாவாசையின் தனிச் சிறப்பு: இந்த அமாவாசை செவ்வாய்க்கிழமையில் வருவது மேலும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் வீரம், துணிவு, ஆற்றல் ஆகியவற்றை அளிக்கும் கிரகமாகப் போற்றப்படுகிறது. அமாவாசையோ பித்ரு வழிபாட்டுக்கு உகந்த திதி. இரண்டும் இணையும் போது பாவங்கள் நீங்கி, துன்பங்கள் தீரும். குறிப்பாக முருகப்பெருமானின் அருளைப் பெற இது சிறந்த நாள்.முருகனை வழிபடுவோருக்கு கடன் சுமை குறையும், பொருளாதார நிலை மேம்படும். நோய்கள் நீங்கி உடல் நலமும் மன வலிமையும் அதிகரிக்கும்.
செயல்களில் வெற்றி கிட்டும், எதிரிகள் தோற்கும். மன அமைதி, ஞானம், பக்தி வளர்ந்து வாழ்க்கை உயரும் என்பது புராண நம்பிக்கைகள். இன்றைய தினம் திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி உள்ளிட்ட முருகன் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தேனாபிஷேகம் செய்து வேண்டுதல்கள் நிறைவேற பிரார்த்தித்தனர். இத்தகைய புனித நாட்களில் மனமுருகி வழிபடுவோருக்கு முன்னோர்களின் ஆசியும், முருகனின் கருணையும் நிச்சயம் கிட்டும். குடும்ப நலனுக்காக இன்று ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வழிபாடுகளைச் செய்து பயனடைய வேண்டும்.

