தமிழ் மாதத்தில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளியில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில், தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோயிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் சிறப்பு வாய்ந்த மாதங்கள் ஆகும். அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.

விரதமிருந்து அக்னி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்து படைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர். இக்கோயிலுக்கு தென் தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோயில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பத்தினருடன் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இக்கோயிலுக்கு விழா காலங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையன்று இக்கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அம்மன் சப்பரத்தில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இத்திருவிழா ஒரு வார காலம் கோலாகலமாக நடைபெறும்.

அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடிப் பெருந்திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு 21 வகையான திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின், சிவாச்சாரியார்கள் திருக்கோயிலில் உள்ள கொடிக்கம்பத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி திருவிழா கொடியினை ஏற்றினர்.

கொடியேற்ற நிகழ்வில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, திருக்கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், பரம்பரை அரங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களான இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என் மேட்டுப்பட்டி, அப்பனேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version