இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் வருடத்தில் அனைத்து நாட்களும் பக்தர்களின் கூட்டம் இங்கு அலைமோதும்.

அதேப்போல இங்கு எப்போதும் ஏதேனும் ஒரு திருவிழாவும் நடந்துக் கொண்டே இருக்கும். அப்படி நடைபெறும் விழாக்களில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் இந்தாண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடர்பாக தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. முதலில் செப்டம்பர் மாதம் 15 முதல் 23-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா, தொடர்ந்து அக்டோபர் மாதம் 12 முதல் 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முன்னதாக செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் வாகன வீதிஉலாக்கள் நடக்கின்றன.

கொடியேற்றம் :

செப்டம்பர் 15-ந்தேதி மாலை கருட கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 16-ந்தேதி காலை 8 மணிக்கு சின்ன சேஷ வாகன வீதிஉலா. மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு ஹம்ச வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை 8 மணிக்கு சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை 8 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

கருட சேவை :

19-ந்தேதி காலை 8 மணிக்கு மோகினி அலங்காரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை ‘சிகர’ நிகழ்ச்சியாக கருட வாகன வீதிஉலா. 20-ந்தேதி காலை 8 மணிக்கு அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணிக்கு தங்கத்தேரோட்டம், இரவு 7 மணிக்கு கஜ வாகன வீதிஉலா.

கொடியிறக்கம் : 

21-ந்தேதி காலை 8 மணிக்கு சூரியபிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா, 22-ந்தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம். இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா, 23-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version