புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, அதன் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த ஜூன் 21ஆம் தேதி முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களின் தொடர்ச்சியாக, தினசரி பல்வேறு மங்களகரமான வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, வண்ண மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். பட்டாச்சாரியார்களின் வேத மந்திர முழக்கங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, “கோவிந்தா கோவிந்தா” என்ற கோஷத்துடன் திரளான பக்தர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமசிவாயம், வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், அரசு அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version