புதுச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாங்கனி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை வழங்கியும், பிரசாதமாக பெற்றுக் கொண்டும் சிவனை வழிபட்டனர்
63 நாயன்மார்களில் ஒருவரான பெண் நாயன்மாரும், ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்டவருமான ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலில் விமரிசையாக நடைபெறும்.
இன்று மாங்கனி திருவிழா நாளையொட்டி காரைக்காலில் வெகுவிமர்சையாக மாங்கனி திருவிழா நடைபெற்றது. அதே போன்று காரைக்கால் அம்மையார் எழுந்தருளியுள்ள புதுச்சேரி அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்று நடைபெற்ற மாங்கனி திருவிழாவில் பரமசிவன் அடியார் கோலத்தில் பத்ம ஆசனத்தில் அமர்ந்து மாங்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பவழக்கால் விமானத்தில் கோவில் பிரகாரத்தில் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காரைக்கால் அம்மையருக்கு மாங்கனிகளை வழங்கியும், பூஜை செய்த மாங்கனிகளை பிரசாதமாக பெற்றுக்கொண்டு காரைக்கால் அம்மையாரையும், சிவனையும் வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் மாங்கனிகளை உண்டால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் என்பது குறிப்பிடத்தக்கது.
