பொதுவாக சனீஸ்வர பகவானுக்கு தனி பிரகாரம் கோயில் இருப்பது தனி சிறப்பு. அப்படி சனி பகவானக்கு என்று தனி கோயில் உள்ள ஆலயம் திருநள்ளாறு. காரைக்காலில் உள்ள இக்கோயிலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தந்து சிறப்பு பரிகாரங்கள் செய்வதுண்டு.
அகஸ்தீஸ்வரர் கோயில் :
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் 9 நவகிரகங்களுக்கு என்று தனித் தனியே கோயில்களும் உண்டு. அந்த வகையில், கர்மபலனை அளிக்கும் சனீஸ்வரனுக்கு உரிய தலமாக, பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. தொண்டை மண்டலத்தில் உள்ள இக்கோயில் சோழர் காலத்தை சேர்ந்தது. இக்கோயிலின் கருவறையின் கோபுர அமைப்பு சோழர்காலத்து கட்டட அமைப்பை இன்றும் மிளிரச்செய்கிறது.
தல வரலாறு :
சிவன் பார்வதி இருவருக்கும் கைலாய மலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு முப்பது முக்கோடி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் என உலகத்து உயிர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் பூமி சமநிலையை இழந்தது. சிவபெருமான் பூமியைச் சமநிலைப்படுத்துவதற்காக அகத்தியரை தெற்கு நோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டார்.
இறைவனின் கட்டளைப்படி, பூமியின் எடையைச் சமநிலைப்படுத்துவதற்காக அகத்தியர் தென்பகுதிக்கு வந்தார். அவர் பொதிகை மலைகளுக்குச் செல்லும் வழியில், இங்கே சுயம்பு லிங்கம் ஒன்றை செய்து சிவபெருமானை வழிபட்டார். பல ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.
இத்தலத்தில் இறைவன் தந்த வரத்தின் படி அகத்தியர், சிவன் பார்வதி திருக்கல்யாண தோற்றத்தை கண்டு தரிசித்தார். சனீஸ்வரன் தான் பெற்ற தோஷத்தை போக்கிக்கொள்ள சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அவர் தவத்தில் தோன்றிய சிவன், இத்தலத்திற்கு வந்து தன்னை வழிபடுமாறு கூறினார். சிவனின் வழிகாட்டுதலின் படி சனீஸ்வரப்பெருமான் இத்தலத்திற்கு வந்து ஒரு குளத்தை உருவாக்கி சிவபெருமானை வழிபட்டு நலம் பெற்றார்.
மேலும் சிவபெருமானின் அருளின்படி சனீஸ்வரர் இங்கு மங்கள சனீஸ்வரராக காட்சி தருகிறார். இக்கோவில் வடதிருநள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது.
கோயிலின் சிறப்பு :
இக்கோவில் சனிபகவானின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் ராகு மற்றும் கேதுவின் பரிகாரத்தலமாகவும் உள்ளது. ராகு காலம், பிரதோஷம், ஆருத்திரா தரிசனம், சிவராத்திரி, சனிப்பெயர்ச்சி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபமிட்டு வழிபாடு செய்வது நலம் தரும்.
வழி :
பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
