மாவட்டத்தில் கோயில்கள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மாவட்டம் முழுவதுமே கோயில்களாக இருக்கும் என்றால் அது திருச்சியில் தான். இங்கு ரெங்கநாதர் கோயில், மலைக்கோட்டை மட்டுமின்றி அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலும் ஒன்று. கண்ணனூர் என அழைக்கப்படும் இந்த இடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தல வரலாறு :
கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான்.
அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன் என்று அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வமாக சமயபுரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.
கோயில் சிறப்புகள் :
சமயபுரம் அம்மன் சிலை சாதாரணக் கற்களால் ஆனது அல்ல. இது பல்வேறு மூலிகைகள், நவதானியங்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்டது. எனவே, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை, மாறாக முன்புறம் உள்ள சிறிய உற்சவ சிலைக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. நோய்களைத் தீர்க்கும் மருத்துவச்சியாகவும், ஆதிபராசக்தியின் வடிவமாகவும் அம்மன் விளங்குகிறாள். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு இங்கு சென்று வழிபடுவது சிறப்பு.
வழி :
திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து தொடர்ந்து சமயபுரத்திற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
