யோகினி ஏகாதசி :

இந்து சாஸ்திரங்களின்படி, யோகினி ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் அறிந்த மற்றும் அறியாத அனைத்து பாவங்களும் நீங்கும், நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். இறுதியில் மோட்சத்தை அடைவதற்கான பாதை எளிதாகும் என்று நம்பப்படுகிறது.

விரதமும், நன்மையும் :

பஞ்சாங்கத்தின்படி யோகினி ஏகாதசி விரதம் நாளை (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. ஏகாதசி திதி நாளை காலை 8:16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் அதிகாலை 5:22 மணிக்கு முடிவடைகிறது. இந்து மரபின்படி, சூரிய உதய நேரத்தில் இருக்கும் திதிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் நாளை யோகினி ஏகாதசி கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த விரதம் பாவ விமோசனத்தை மட்டுமல்லாமல், வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மன அமைதியையும் தருகிறது. யோகினி ஏகாதசி நாளில் பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து, புனித நீராடி, விரதம் தொடங்க வேண்டும். பின்னர், பூஜை அறையில் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி சிலை அல்லது படத்தை வைத்து பக்தியுடன் வழிப்பட வேண்டும்.

வழிபாட்டு முறை :

பூஜையில் தூபமிட்டு, நெய் தீபம் ஏற்ற வேண்டும். பெருமாளுக்கு உகந்த புளியோதரை, தயிர்சாதம் நைவேத்யம் வைக்கலாம். பூஜைக்கு மஞ்சள் நிற மலர்கள், மஞ்சள் நிற பொருட்கள் பயன்படுத்த வேண்டும். தேவையான பழங்கள் படைக்க வேண்டும்.

மகாவிஷ்ணுவின் முன் நெய் விளக்கேற்றி ஆரத்தி செய்ய வேண்டும். இந்த நாளில் ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’ பாராயணம் செய்வதும், ‘ஏகாதசி விரதக் கதை’ கேட்பதும் மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது. பக்தர்கள் தங்கள் உடல் நிலை மற்றும் குடும்ப மரபுக்கு ஏற்ப விரதம் இருக்கலாம். இரவில் விழித்திருந்து பஜனை, கீர்த்தனை மற்றும் இறைநாம பாராயணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

யோகினி ஏகாதசி என்பது வெறும் பூஜை நாளல்ல, அது சிந்தனை, பேச்சு மற்றும் செயல்களில் தூய்மையை வளர்க்கும் நாள். எனவே பக்தர்கள் அசைவ உணவு மற்றும் அதிக கார உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பொய் பேசக் கூடாது. கோபம், வாக்குவாதம் மற்றும் கடுமையான சொற்களைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்து ஆன்மிக சிந்தனையில் ஈடுபட வேண்டும். மகாவிஷ்ணுவின் நாமத்தை ஜபிக்க வேண்டும். இயன்றால் இரவில் விழித்திருந்து தியானம் மற்றும் பக்தியில் நேரத்தை செலவிட வேண்டும்.

தானம் :

யோகினி ஏகாதசி அன்று பின்வரும் அன்னதானம், பழங்கள் மற்றும் இனிப்புகள், தண்ணீர் நிரப்பப்பட்ட மண்பானைகள் தானம் வழங்கலாம். ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்.

இந்திய கலாச்சாரத்தில் தானம் எப்போதும் உயர்ந்த தர்மமாக மதிக்கப்பட்டுள்ளது. பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்கும் போது, தாகமுற்றவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் போது அல்லது உதவியற்றவர்களுக்கு உதவும் போது, அந்த சேவை நேரடியாக இறைவனை சென்றடைகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version