திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது சுயம்புவாக எழுந்தருளியே புகழ்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆடி மாத திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், போன்ற தமிழகம் மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள புதுச்சேரி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பங்களுடன் பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து தங்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முடி காணிக்கை செலுத்தி பொங்கலிட்டு ஆடு, கோழி என பலியிட்டு வேப்பஞ்சேலை ஆடைகளை அணிந்து கோவில் சுற்றி வலம் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பவானி அம்மனை தரிசனம் செய்து செல்வர்.

அந்த வகையில் இந்தாண்டும் ஆடி மாதம் பிறந்தது முதல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்கின்றனர். நேற்று 3வது வாரத்தை முன்னிட்டு பவானி அம்மன் கோவில் சுற்றியுள்ள பெரியபாளையம், தண்டுமாநகர், ராள்ளபாடி, அரியபாக்கம், உள்ளிட்ட 4 கிராம மக்கள் பவானி அம்மன் சிலைகளை வெவ்வேறு கோலங்களில் வடிவமைத்து சிறப்பு அலங்காரம் செய்து டிராக்டரில் அமர்த்தி மேளதாள வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் கரகாட்டம், மயிலாட்டம் நாடகங்களுடன் தாய் வீட்டு சீதனமாக பவானி அம்மனுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வலையல்,பொங்கல் பானைகள் போன்றவற்றை தலையில் சுமந்து ஒரு கிராமத்திற்கு பின் மற்றொரு கிராமத்து மக்கள் ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து பவானி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.

கிராமத்தில் முக்கிய பெரியவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. இவ்விழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பவானி அம்மன் அணை வழிப்பட்டு சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version