பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆனி பிரம்மோற்சவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 8-ம் தேதி தட்சிணாயன புண்ணிய காலத் தொடக்கத்தை ஒட்டி, கோயிலின் 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழாவின் நான்காம் நாளான நேற்று இரவு, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்குச் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் செய்யப்பட்டன. இதில் விநாயகப் பெருமான் வெள்ளி கவசத்திலும், சந்திரசேகர் வெண் பட்டு அலங்காரத்திலும் ஜொலித்தனர். அதனைத் தொடர்ந்து சரவிளக்கு தீபாராதனை மற்றும் பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
பூஜைகளுக்குப் பிறகு, விநாயகரும் சந்திரசேகரரும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினர். கோயில் ஊழியர்கள் சுவாமியைத் தோளில் சுமந்து வர, ராஜகோபுரம் வழியாக நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த பக்திப்பூர்வமான நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டிருந்தனர்.
