நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ஊராட்சியில் புகழ்பெற்ற வாழ்முனீஸ்வரர் ஆலயத்தின் ஆனி மாதத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.
இதையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள் வாழ்முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மன் கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். முன்னதாக, வாழ்முனீஸ்வரருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.
விழாவின் ஒரு பகுதியாக, மாணவ-மாணவியரின் சிலம்பாட்டத் திறனும், இளம் பெண்களின் கும்மி நடனமும் அரங்கேறின. கலை நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
