ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழா களைக்கட்டும். அனைத்து விதமான அம்மன் கோயில்களிலும் ஆடி மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அத்தோடி ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் தரப்படும் பிரசாதங்களில் முதன்மையானது கூழ். கம்மங்கூழ் வார்த்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
ஆடி மாதம் என்றாலே காற்றும், வெப்பமும் இணைந்திருக்கும். வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவும் மாதம் இது. இந்த சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால், அம்மன் வழிபாடு ஆடி மாதத்தில் செய்யப்படுகிறது. அதேபோல், அம்மனுக்கு பூஜைகளும் வழிபாடுகளும் வீட்டில் செய்யப்படுகின்றன. இந்த நாளில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கப் பழக்கப்படுத்தினார்கள். தலைக்கு குளிப்பதும் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் வழக்கமாயிற்று.
ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, வரலட்சுமி பூஜை என்றெல்லாம் பூஜைகளும் புனஸ்காரங்களும் அமர்க்களப்பட, அதற்கேற்ற உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிட வலியுறுத்தினார்கள் முன்னோர்கள். ஆடி மாத வழிபாடுகளில், மாவிலையும் வேப்பிலையும் தவறாமல் இடம்பிடித்தன. மாவிளக்கேற்றி வழிபடுவதும் எலுமிச்சை சாதம், எலுமிச்சை தீபம் முதலானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் நோயில் இருந்தும் நோய்க்கிருமியில் இருந்தும் காப்பதற்குத்தான் வழிமுறைப்–படுத்தப்பட்டன.
ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் முக்கியமானது கூழ். உடலையும் வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்தும் உன்னதமான பிரசாதம் கூழ். ஆடி மாதம் முழுவதுமே, அம்மனுக்கு இந்தக் கூழைச் செய்து படைத்து பின்னர் விநியோகிப்பது ரொம்பவே விசேஷம். மிகுந்த பலன்களையும் வரங்களையும் தரக்கூடியது.
ஆடி மாதத்தில் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், தூசிகளும் பறக்கும். அப்போது இருமல், காய்ச்சல், போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது. அதனை தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றப்படுகிறது. இதனை ஆடிக் கஞ்சி என்பர். இதில் வேப்பிலை கலந்து தருவதால் அம்மனின் அருள் பிரசாதமாகவும், நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் கருதி மக்கள் கொண்டாடுகிறார்கள்.
