சின்ன மண்டலியில் பழமை வாய்ந்த ஆரூரம்மன் கோயிலில் வைகாசி ஜாத்திரை திருவிழாவில் கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த சின்ன மண்டலி கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆரூரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வைகாசி மாத ஜாத்திரை திருவிழா கடந்த 17ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கி ஏழு நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஆலய வளாகத்தில் கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து விதவிதமான காய்கறிகள் மற்றும் பல்வேறு தானியங்களுடன் அம்மனுக்கு படையலிட்டு கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமாக ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளம் முழங்க வீதிகளில் உலாவந்த ஆரூரம்மனை கிராம மக்கள் மஞ்சள் நீராட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து எட்டு நாட்களாக விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தேங்காயை தரையில் உருட்டியபடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.பின்னர் கிராம தேவதையான ஆரூரம்மனுக்கு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து தீப்பந்தம் ஏந்தியபடி பக்தர்கள் புடைசூழ நெய்விளக்கு ஏந்தியபடி போலாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பாகசாலை விழாவில் ஏராளமான பக்தர்கள் இடுப்பில் ஊசி குத்தியபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஆரூரம்மனை வழிபட்டு சென்றனர்.

