திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் 166-வது பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) கோவிலில், ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் 166-வது ஆண்டு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனோடு ஐக்கியமான திருநாளை நினைவுகூரும் வகையில், கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் ஸ்ரீ சேரமான் நாயனார் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவையொட்டி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சீகக்காய் தூள், மஞ்சள் தூள், பச்சரிசி மாவு, 100 கிலோ பஞ்சாமிர்தம், தேன், 500 லிட்டர் பால், 300 லிட்டர் தயிர், 10 கிலோ விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் ஸ்ரீ சேரமான் நாயனார் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், விழாவின் சிறப்பு நிகழ்வாக நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து “ஸ்ரீ சந்திரசேகரர் ஸ்ரீ சுந்தரரை தடுத்தாட்கொண்ட காட்சி” என்ற ஆன்மிக நிகழ்வை வெகுவிமரிசையாக நடத்தினர். இந்த நிகழ்வு பக்தர்களை பெரிதும் கவர்ந்தது.
அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டும் நடைபெற்ற 166-வது பெருவிழாவில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர்.

