ஒருவரின் வீரம், முயற்சி, இளைய சகோதரர்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள ஜாதகத்தில் 3-ம் பாவம் (மூன்றாம் வீடு) என்பது முக்கியமான இடமாகும். மேலும், இந்த பாவகம் உபசய ஸ்தானங்களில் (வளர்ச்சி தரும் வீடுகள்) ஒன்றாகவும் கருதப்படுகிறது.
3-ம் பாவகத்தின் காரகங்கள்:
ஜாதகரின் தனிப்பட்ட திறமைகளையும், அவரைச் சுற்றியுள்ள உடனடிச் சமூக வட்டத்தையும் 3-ம் பாவகம் தான் குறிக்கிறது. இளைய சகோதர, சகோதரிகள், அண்டை வீட்டினர், தைரியம், வீரம், மன உறுதி, சுய முயற்சி, சுறுசுறுப்பு ஆகியவைகள் 3-ம் பாவகத்தை குறிக்கிறது. கையெழுத்து, ஒப்பந்தங்கள், கலைகளில் ஆர்வம் (இசை, நடனம், ஓவியம்) ஆகியவையும்,
ஒருவரின் எழுத்துத் திறன், பேச்சு, ஊடகம், பத்திரிக்கை, தகவல் தொழில்நுட்பம், தூது செல்லுதல், குறுகிய தூரப் பயணங்கள், இடமாற்றம், தினசரிப் பயணம் ஆகிய நிகழ்வுகளுக்கு 3-ம் பாவகத்தைதான் பார்க்க வேண்டும்.
கைகள், தோள்கள், மார்பின் மேல் பகுதி, காதுகள் (குறிப்பாக வலது காது), நரம்பு மண்டலம் ஆகிய உடல் உறுப்புகள் சார்ந்த நிகழ்வுகள் இந்த பாவகத்தில் தான் வருகிறது.
3-ம் பாவகத்தின் சாதக, பாதக பலன்கள்:
3-ம் அதிபதியும், 3-ம் வீடும் சுபத்துவமாக அல்லது வலுவாக இருந்தால் சாதக பலன்களும், பாபத்துவமாக அல்லது பலவீனமாக இருந்தால் பாதக பலன்களும் ஏற்படும்.
3-ம் பாவகம் ஒருவருக்கு சாதகமாக இருந்தால் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சலும், விடாமுயற்சியும் இருக்கும். இளைய சகோதர, சகோதரிகளால் சாதகமான நிகழ்வுகள், நன்மை மற்றும் அவர்களுடன் இணக்கமான உறவு உருவாகும். சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் மூலம் புகழும், வருமானமும் ஈட்டுவர். ஊடகத் துறையில் சாதிக்கலாம். இசை, நடிப்பு, விளையாட்டு அல்லது கைவினைப் பொருட்களில் தனித்திறமை விளங்கும்.
3-ம் பாவகம் ஒருவருக்கு பாதகமாக அமைந்தால், எந்தவொரு விஷயத்திலும் தயக்கம், வீண் பயம் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு உருவாகும். இளைய சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்படலாம். தவறான புரிதல்களால் அவப்பெயர், வீண் வதந்திகளில் சிக்குதல், கடிதப் போக்குவரத்துகளால் நஷ்டம் ஏற்படுதல் போன்ற நிகழ்வுகள் அமையும். தோள்பட்டைக் வலி, கைகளில் நரம்புப் பிரச்சனை அல்லது காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
9 கிரகங்கள் 3-ம் வீட்டில் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
3-ம் பாவகம் என்பது உபசய ஸ்தானம் என்பதால், இங்கு சுப கிரகங்களை விட பாப கிரகங்கள் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) அமர்வது அதிக நற்பலன்களைத் தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சூரியன்: அசாத்திய தைரியமும், பராக்கிரமமும் கொண்டிருப்பார். அரசாங்க ஆதரவு கிடைக்கும். நிர்வாகத் திறன் சிறப்பாக இருக்கும். இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகலாம். தந்தையோடு முரண்பாடுகள் ஏற்படலாம்.
சந்திரன்: கலை நயம் மிக்கவராக, கற்பனைத் திறன் வாய்ந்தவராக இருப்பார்கள். எழுத்துத் துறை, கவிதை போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். அடிக்கடி குறுகிய பயணங்கள் செய்யும் நிகழ்வுகள் இருக்கும். வளர்பிறை சந்திரனாக இருந்தால் சுப பலனும், தேய்பிறை சந்திரனாக இருந்தால் மனச்சஞ்சலமும், அடிக்கடி மாறும் சிந்தனைகளும் இருக்கும்.
செவ்வாய்: அஞ்சாத நெஞ்சம் கொண்டவராக இருப்பார். விளையாட்டு, ராணுவம், காவல்துறை, பொறியியல் துறைகளில் சாதிப்பார். உடல் வலிமை மிக்கவர். செவ்வாய் பகவான் 3-ம் பாவகத்தில் தனியாக இருந்தால் இளைய சகோதரர்களுடன் கடுமையான பகை அல்லது அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
புதன்: மிகச்சிறந்த புத்திசாலியாகவும், கணக்கு வழக்குகளில் சிறந்தவராகவும் இருப்பார்கள். பத்திரிகைத்துறை, தரகு, வணிகம், தகவல் தொழில்நுட்பத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு இருக்கும். புதன் பலவீனமானால் நரம்புத் தளர்ச்சி அல்லது தவறான முடிவுகளால் பாதிப்புகள் ஏற்படலாம்.
குரு: கனிவான பேச்சு, ஆன்மீகச் சிந்தனை உடையவர். இவர்களின் ஆலோசனைகள் பிறருக்குப் பெரிதும் உதவும். சிறந்த எழுத்தாளராகவோ, ஆசிரியராகவோ வரலாம். குரு இங்கு அமர்வது அவரது சொந்த வலிமையைக் குறைக்கும் (மறைவு ஸ்தானம் என்பதால்). இதனால் சுய முயற்சி சற்று தாமதமாகவே பலன் தரும்.
சுக்கிரன்: கலை, இசை, சினிமா, நாடகம் போன்றவற்றில் அசாத்திய திறமையும் புகழும் கிடைக்கும். பெண் சகோதரிகளின் ஆதரவு உண்டு. இனிமையான பேச்சால் பலரைக் கவர்வர். ஆடம்பரச் செலவுகள் அதிகமாகும். சில நேரங்களில் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
சனி: சனி பகவான் 3-ம் பாவகத்தில் இருப்பது மிகச்சிறந்த அமைப்பாகும். மிகுந்த பொறுமை, நிதானம் மற்றும் உழைப்பால் முன்னேறுவார்கள். பிற்கால வாழ்க்கை மிக உன்னதமாக இருக்கும்.
ராகு: 3-ம் பாவகத்தில் ராகு பகவான் இருந்தால் அசாத்திய துணிச்சல் வரும். அரசியலில் வெற்றி, வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் திடீர் யோகம், கணினி மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி கிடைக்கும். குறுக்கு வழியில் யோசிக்கத் தூண்டும். காதுகளில் சிறு கோளாறுகள் வரலாம்.
கேது: ஆன்மிக ஞானம், மர்ம வித்தைகளில் ஆர்வம், தியானம் போன்றவற்றில் ஈடுபாடு தரும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். இளைய சகோதரர்களுடன் சுமுக உறவு இருக்காது. கைகளில் ஏதேனும் காயம் அல்லது தழும்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகளை வைத்தே பலன்களை பார்க்க முடியும். மேற்கூறியவை பொதுவானவையே.

