”குலத்தை காக்கும் தெய்வம் குலதெய்வம்”. ஒவ்வொரு குடும்பத்திற்கும் எப்படி முன்னோர்களின் வரலாறு இருக்கிறதோ அதேப்போல, முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வத்தின் வரலாறும் நிச்சயம் இருக்கும். அப்படியான குலதெய்வத்தை ஒவ்வொரு மனிதரும் வருடத்திற்கு ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்து வருவர்.
பெற்ற தாயைப் போன்று பிள்ளைகள் கேட்காவிட்டாலும் அவர்களின் தேவை அறிந்து அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைக்கும் சக்தி குலதெய்வத்திற்கு உண்டு என்பது நம்பிக்கை. ஆகையால் தான் எந்தக் காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும் என முன்னோர் கூறுவர். அதேப் போல, ஒருவரது குலம் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானாலும் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம்.
வேரின்றி மரங்கள் செழிப்பதில்லை; அதுபோல குலதெய்வ வழிபாடின்றி வாழ்வு சிறப்பதில்லை என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அப்படியான குலதெய்வத்தை அவரவர் வழிபடும் முறைகளோடு வழிபட வேண்டும். ஒரு சில குலதெய்வங்களுக்கு சைவமும், ஒரு சில குலதெய்வங்களுக்கு அசைவமும் பிடித்ததாக இருக்கும்.
அப்படியிருக்க, அவரவர் குலதெய்வத்தின் வரலாறு படி, அத்தெய்வத்திற்கு பொங்கல் வைத்து, அசைவ, அல்லது சைவ சாப்பாடு படைத்து வருடத்திற்கு ஒருமுறையேனும் வழிபடுவது மிகவும் உகந்தது என முன்னோர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு ஜாதகத்தில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும், குலதெய்வத்தின் அருள் இருந்தால் அந்தத் துன்பங்கள் அவரை பாதிக்காது. அதே சமயம், குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற எந்தத் தெய்வங்களின் அருளும் கிடைக்காது. குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக நின்று காப்பது குலதெய்வமே என்ற கூற்றும் உண்டு.

