ஒருவரின் சுகபோக வாழ்க்கையை கணிப்பதற்கு 4ம் பாவகமே முக்கியம். இது, ‘கேந்திர ஸ்தானம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
4-ம் பாவகத்தின் காரகங்கள்:
தாய், வீடு, வாகனம், பூமி, நிலம், சொத்துக்கள். மன அமைதி, மகிழ்ச்சி, சுகபோகங்கள், கல்வி (தொடக்கக் கல்வி), வசிக்கும் இடம். தாயின் உறவுகள், உறவினர்களுடனான தொடர்பு, உடல் ரீதியாக இதயம் ஆகியவற்றை குறிப்பது 4ம் பாவகம் ஆகும்.
சாதக மற்றும் பாதகங்கள்:
ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் பாவகம் வலுவாக இருந்தால், அவர் சிறந்த சொத்து சுகங்களுடனும், நல்ல தாய்வழி ஆதரவுடனும், அமைதி மற்றும் நிம்மதியான மனநிலையுடன் இருப்பார். சமூகத்தில் அந்தஸ்து மற்றும் கௌரவம் கிடைக்கும். அதுவே, ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் பாவகம் பலவீனமாக இருந்தால் அல்லது பாப கிரகங்களின் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) தொடர்பில் இருந்தால், தாயின் உடல்நிலையில் பாதிப்பு, மன அழுத்தம், வீடு/வாகன இழப்பு அல்லது சொத்து தொடர்பான வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
4-ம் பாவகத்தில் 9 கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
கிரகங்களின் தன்மைக்கேற்ப 4-ம் பாவகத்தில் அவை அமரும் போது பலன்கள் மாறுபடும்.
சூரியன்: தாய் வழி உறவுகளில் கருத்து வேறுபாடு, சொத்துச் சிக்கல்கள் இருக்கும். ஒரே இடத்தில் இருக்கும் அமையாது. ஆனால் அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும்.
சந்திரன்: தாய் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருப்பார். சொந்த வீடு மற்றும் வாகன வசதி அமையும். மன அமைதி, நல்ல கற்பனைத்திறன் இருக்கும்.
செவ்வாய்: நிலம் மற்றும் சொத்துக்களால் லாபம் உண்டாகும். ஆனால் மனக் கசப்புகள், கோபமான குணம் இருக்கும். சில சமயம் சொத்து வழக்குகள் ஏற்படும் சூழல் அமையும்.
புதன்: அறிவுசார்ந்த கல்வி அமையும். வாகன யோகம் உண்டாகும். தாய் வழி ஆதரவு நல்ல உறவுமுறை இருப்பார்கள்.
குரு: மிகச் சிறந்த நிலையாக பார்க்கப்படுகிறது. சொத்துக்கள், வசதி வாய்ப்புகள், தாயின் ஆசி, அமைதியான வாழ்க்கை, ஆன்மிக ஆர்வம் ஆகியவை அமையும்.
சுக்கிரன்: ஆடம்பரமான வீடு, விலையுயர்ந்த வாகனங்கள் இருக்கும். மிகுந்த மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல நண்பர்கள் அமைவார்கள்.
சனி: கடின உழைப்பிற்குப் பிறகு தான் சொத்து சேர்க்கை அமையும். தாயின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனக் கவலைகள், நீண்ட கால சொத்து வழக்குகள் இருக்கும்.
ராகு: வெளிநாட்டுத் தொடர்புகளால் சொத்துக்கள் அமையும். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் ஒருவித திருப்தியின்மை இருக்கும்.
கேது: ஆன்மிக நாட்டத்தால் சொத்து சுகங்களில் பற்றின்மை உருவாகும். சில நேரங்களில் வீடு மாறிக் கொண்டே இருப்பது போன்ற நிலை இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
லக்னம், ராசி, 4ம் அதிபதி நிலை, நவாம்சம், தசா- புக்தி, பார்வைகள் ஆகியவை முக்கியம். ஒரு கிரகத்தை மட்டும் பார்க்காமல் முழு ஜாதகத்தில் மற்ற பாவகங்கள், கிரக அமர்வுகளையும் பார்க்க வேண்டும்.

