திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ கணபதி கோயிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
அம்மணம்பாக்கம் நடுக்கண்டிகை பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பூங்காவனத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்வ கணபதி கோயில்கள் கிராமமக்கள், பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 17-ம் தேதி ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து கிராம தேவதையான ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் கிராமமக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை காட்டி வழிபட்டனர். 18-ம் தேதி பந்த கால் நடும் விழா நடந்தது.
அதனைத்தொடர்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து கணபதி ஹோமம், கோ பூஜை, லஷ்மி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது.

யாக பூஜைகள் நடந்து முடிந்த பின்னர் யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளத்தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, பூங்காவனத்தம்மன் மற்றும் செல்வ கணபதி கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

