காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதால் நட்சத்திர முறைப்படி கடந்த வாரம் இக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்ற ஆனி மாதம் 23-ம் தேதியான இன்று வருவதால், தமிழ் ஆண்டு கணக்குப்படி ஓராண்டு நிறைவு உற்சவம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு திங்களன்று காலையில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு சத்ரு சம்கார யாகபூஜை நடைபெற்றது. அன்று மாலையில் 1008 கலசங்கள் நிறுவப்பட்டு முதல்கால யாகபூஜையும் இன்று காலையில் இரண்டாம் கால யாகபூஜையும் அதனைத்தொடர்ந்து மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

