தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பரபரப்பான ஒரு சிட்டியாக இருந்தாலும் கூட, இங்கும் பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. அப்படி சென்னையின் மையப்பகுதியான பாரிஸ் கார்னரில் உள்ள காளிகாம்பாள் கோயில் பற்றின வரலாற்றை பார்ப்போம்..
தல வரலாறு :
காளிகாம்பாள் கோயில் 1640-ஆம் ஆண்டில் விஜயநகர பேரசின் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முதலில் இந்த கோயில் தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தில் அமைந்திருந்தது. அங்கு மீனவர்கள் அம்பிகையை “சென்னம்மன்” என்று வழிபட்டதாகவும், அதிலிருந்து தான் “சென்னை” என்ற பெயர் வந்ததாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.
1672-ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரின் போது, கோட்டைக்குள் இருந்த கோயில் இடிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனின் சிலையை பாதுகாப்பாக எடுத்து வந்து தற்போதுள்ள தம்பு செட்டி தெருவில் புதிய கோயிலை கட்டினர். அதுதான் இன்றைய காளிகாம்பாள் கோயில். சுமார் 400 ஆண்டுகள் பழமையானது இக்கோயில்.
ஆதிசங்கரர் வழிபாடு :
முதலில் உக்கிரமான காளி வடிவம் வழிபடப்பட்டது. பின்னர் ஆதி சங்கரர் வந்து சாந்தப்படுத்தி, சாந்த சொரூபமான காமாட்சி வடிவில் அமைத்ததாக கூறப்படுகிறது. அவர் இங்கு “அர்தமேரு ஸ்ரீ சக்கரம்” பிரதிஷ்டை செய்தார். அவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் இன்றும் இருப்பது காணலாம்.
ஆதலால் இத்தலத்தில் அம்மன் “காளி” மற்றும் “காமாட்சி” ஆகிய இரு வடிவங்களின் சங்கமாக காட்சி தருகிறார். அதனால் தான் “காளிகாம்பாள்” என்ற பெயரும் வந்தது. இக்கோயிலில் மூலவர் காளிகாம்பாள் நான்கு கரங்களுடன், சிங்க வாகனத்தில் வீற்றிருக்கிறார். அருகில் உற்சவர் காமாட்சி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
சிவாஜி மன்னர் வழிபாடு:
17-ம் நூற்றாண்டு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, 3 அக்டோபர் 1667 அன்று இங்கு வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. கோயிலின் உள்ளே அவர் வழிபட்டதின் புகைப்படங்கள் உண்டு.
சிறப்பு :
ஆடி பூரம், நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற முக்கியமான நாட்களில் அம்மன் விழாக்கோலம் பூண்டு காட்சிதருவாள்.
திருமண தடை, கடன் பிரச்சனை, எதிரிகள் தொல்லை நீங்க இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேலைகள் மற்றும் தொழிலுக்கு ஆதாயமாக இக்கோவிலில் விளக்கேற்றி வழிபடுவது ஒரு சிறந்த மாற்றத்தை தரும் என்பது பலரும் அனுபவித்த ஒன்றாகும்.

