திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் ஆனி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவு உற்சவத்தில், விநாயகர், சின்ன நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 8-ஆம் தேதி 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், ஏழாம் நாள் இரவு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், சின்ன நாயகர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சரவிளக்கு தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், ராஜகோபுரம் முன்பு அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் விநாயகர், சின்ன நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளினர். தொடர்ந்து, நான்கு மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

