ஆனி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு 21 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனி அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அமாவாசை நாளையொட்டி அதிகாலை முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காலை 6 மணிக்கு வனத்துறை சோதனைச் சாவடி திறக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லையா என்பதை தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
அமாவாசையை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு 21 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சிறப்பு பேருந்து சேவை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

