காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்கள் பல அமைந்துள்ளன. அந்த வரிசையில், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் நெடுஞ்சாலையில், வெங்கச்சேரியை அடுத்த கடம்பர்கோயில் பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத கடம்பநாதர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். காசிக்கு நிகரான புண்ணியத் தலமாகக் கருதப்படும் இக்கோயிலில், கடந்த 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 21 ஆண்டுகள் கழித்து மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று மிக விமரிசையாக நடைபெற்றது.

இந்த மகா புண்ணிய விழாவையொட்டி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் முறைப்படி தொடங்கின. அதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 6 மணியளவில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் அம்மன் உள்ளிட்ட சன்னதிகளின் கலசங்களுக்குப் புனித நீர் எடுத்துச் செல்லும் கலச புறப்பாடு தொடங்கியது. மங்கள வாத்தியங்கள்  அதிர, புனித குடங்கள் திருக்கோயிலைச் சுற்றி வலம் வரப்பட்டன.

பின்னர், கோபுரக் கலசங்களுக்குச் சிவாச்சாரியார்கள் சிறப்பு ஆராதனைகள் செய்து, புனித நீரை ஊற்றிப் பெருவிழாவை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் “நமச்சிவாய! நமச்சிவாய!” எனப் பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டு  வழிபட்டனர். இந்த ஆன்மீக நன்நாளில் உத்திரமேரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version