உலகளந்த பெருமாள் கோயில் என்றாலே தமிழ்நாட்டில் தனி புகழ் தான். கள்ளக்குறிச்சி மாவட்ட, திருக்கோவிலூரில் திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், நடுநாட்டு திருப்பதி எனவும் அழைக்கப்படுகிறது இந்த உலகளந்த பெருமாள் கோயில்.
இக்கோயிலில் சாமி சன்னதிகள், கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வரும் 5-ம் தேதி கோயில் மடாதிபதி தேகளீச ராமானுஜாச்சாரியார் முன்னிலையில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 29-ந் தேதி கோவிலில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் பூமாதேவி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
விழாவின் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் தொடங்கின. முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

