திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் ஜெ.ஜெ. நகரில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலின் ஆண்டு தீமிதி திருவிழா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

விழா காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சுவாமி கரகம் பாலித்து, அம்மன் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தெருதோறும் பக்தர்கள் மலர் தூவி, தீபம் ஏற்றி அம்மனை வரவேற்றனர்.

திருவிழாவின் இரண்டாம் நாள் காலை, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் அம்மனை வழிபட்டனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

விழாவின் உச்சநிகழ்வாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் “அம்மன் அருள்” முழக்கத்துடன் அக்னிக்குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். குறிப்பாக, தங்களது குழந்தைகளைத் தலையில் சுமந்தபடி பலர் தீமிதித்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. குழந்தைகளின் நலன், குடும்ப வளம் மற்றும் நோய்கள் நீங்க வேண்டி இந்த நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு மற்றும் வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிழாவை முன்னிட்டு தொட்டியம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களின் பக்தி உணர்வும், தீமிதி நிகழ்வின் அதிர்வும் கிராமமெங்கும் ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply

Exit mobile version