நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள கீழையூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலின் சித்திரை பிரம்மோத்ஸவ விழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த பத்து நாள் பிரம்மோத்ஸவ விழாவில், தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ ரெங்கநாத பெருமாளும், அதிரூப வள்ளி ரெங்கநாயகி தாயாரும் சிறப்பு மலர் அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட்டன. முன்னதாக பக்தர்கள் 51 வரிசை தட்டுகள் எடுத்து வந்து பெருமாளுக்கு சமர்ப்பித்தனர்.

பின்னர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மாங்கல்ய தாரணம் பாரம்பரிய முறையில் நடைபெற்ற போது, மங்கள இசை முழங்க பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்று பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். அந்த தருணம் பக்தர்களை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தியது.

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு, ரெங்கநாத பெருமாளையும் ரெங்கநாயகி தாயாரையும் தரிசித்து அருள் பெற்றனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாண உற்சவம் பக்தர்களின் பேரதிர்வும், ஆன்மிக உணர்வும் நிறைந்த திருவிழாவாக அமைந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version