ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை தினத்தன்று மகள் முருகருக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு தான் சிறப்பு விழாக்கள் நடைபெறும் என்பர். ஆனால் அதே மாதம் முருகருக்கும் சிறப்பான நாளாக கிருத்திகை அமைகிறது.

ஆடி கிருத்திகை :

முருகப்பெருமானுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி விரதம், தை கார்த்திகை போன்ற நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த விதத்தில் ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் ‘ஆடிக் கார்த்திகை’ என சிறப்பிக்கப்பட்டு, சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதுடன், பார்வதி தேவி, தனது சக்தி அனைத்தையும் திரட்டி முருகனுக்கு வேல் கொடுத்ததன் காரணமாக, ஆடிக் கார்த்திகை அன்று, வடிவேல் முருகனை வழிபட்டால் முருகன் அருளோடு அம்மன் அருளும் சேர்ந்து கிடைக்கும் என்பது ஐதீகம்.

கிருத்திகை உருவான வரலாறு :

சிவபெருமான் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு அக்னிகள், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருபெற்றன. பின்னர், அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் தாலாட்டி, சீராட்டி வளர்த்தனர். அந்த கார்த்திகை பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். இதன் காரணமாகவே, கார்த்திகை நட்சத்திர நாள் முருகப் பெருமானுக்கு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

கிருத்திகை விரதம் :

இந்த ஆண்டு ஆடிக் கார்த்திகை நட்சத்திரம், 6-ந் தேதி மாலை தொடங்கி 7-ந் தேதி மாலை வரை இருக்கிறது. விரதம் இருப்பவர்கள், இந்த நேரத்தில் ஆதித்ய ஹிருதயம் பாடலை படித்து விரதத்தை தொடங்கலாம். விரத நேரத்தில் உணவு அருந்தாமல் உபவாசம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

பலன்கள் :

ஆடிக் கார்த்திகை அன்று, முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் திருமணத் தடைகள் விலகும், தொழில் வளர்ச்சி அடையும், கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், ஆரோக்கியமான, ஆனந்த வாழ்வு அமையும். தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆடிக் கார்த்திகையில் விரதம் கடைப்பிடிப்பவர்கள், வாழ்வில் பெரும் வெற்றியை அடைவார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version