காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் ஆனி மாதம் கருட ஜெயந்தியை முன்னிட்டு ஆனி கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 3ம்நாள் கருடசேவையும், அதே போல ஆனி மாதம் ஆனி கருட சேவையும்,ஆடி மாதம் ஆடி கருடசேவையும் என ஆண்டிற்கு 3 முறை கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் கருட ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஆனி கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கருட சேவை உற்சவத்தை யொட்டி வரதராஜப்பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, கத்திரி பூ நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ மனோரஞ்சித பூ மல்லிகைப்பூ ரோஜா பூ உள்ளிட்ட மலர் மாலைகள்,
திருவாபரணங்கள், முத்து கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பச்சை பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் தூப தீப ஆரத்தி காட்டியதை தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ஆழ்வார் பிரகாரத்தில் வலம் வந்து, கோபுர தரிசனம் தந்து,மேள தாளங்கள் முழங்க,வேத பாராயண கோஷ்டினர், பஜனை கோஷ்டிகள் பாடிவர 4 மாடவீதிகளில் திரு வீதி உலா வந்து
பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார்.

ஆனி கருட சேவை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பகதர்கள் கருடசேவை உற்சவத்தில் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version