பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமங்கள மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கவுள்பாளையம் கிராமத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமதுரை வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த ஸ்ரீமங்கள மாரியம்மன் ஆலயத்தைப் புதுப்பிக்க கிராமப் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் இணைந்து சிறப்பான முறையில் திருப்பணிகளை மேற்கொண்டனர். பணிகள் அனைத்தும் நன்முறையில் நிறைவுற்றதை அடுத்து, ஆலய கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா முறைப்படி தொடங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, விசேஷ திரவிய ஹோமங்கள் நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தாரை தப்பட்டை முழங்க, வேத மந்திரங்கள் ஓத புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி, கோபுர கலசங்களை வந்தடைந்தன. அங்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்தினர். அப்போது கூடிருந்த பக்தர்கள் “அரோகரா” கோஷமிட்டு பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர், கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

