கர்நாடக மாநிலம், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சவுபர்ணிகா நதிக் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு கொல்லூர் மூகாம்பிகை அம்மன் திருக்கோயில். அம்மனின் சக்தி பீடங்களில் ஒன்றான கொல்லூர் தலம், அம்பிகையின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திருத்தலம், கலைகளின் அதிபதியான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் ஒருங்கிணைந்த வடிவமாகத் திகழ்கிறது.
ஆதிகாலத்தில் இப்பகுதியில் ‘காமன்’ என்ற அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவம் புரிந்து, அதன் மூலம் அழியாத வரங்களைப் பெற முயன்றான். அவனது தவத்தைக் கலைக்க நினைத்த தேவர்கள், அசுரனின் எண்ணம் நிறைவேறினால் உலகிற்குப் பெரும் ஆபத்து என்று உணர்ந்து பராசக்தியிடம் முறையிட்டனர். அசுரன் முன் தோன்றிய சிவன், வரம் கேட்கச் சொன்ன அந்த நொடியில், பராசக்தி அசுரனின் நாவை முடக்கி, பேச முடியாதவாறு மாற்றினாள். இதனால் அவனுக்கு ‘மூகாசூரன்’ என்று பெயர் வந்தது. வரம் கேட்க முடியாமல் போன கோபத்தில், அவன் முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். இதையடுத்து, முப்பெரும் தேவிகளின் சக்தியும் ஒன்றாக இணைந்து, ஒரு பிரம்மாண்ட சக்தியாக அவதரித்து, கொல்லூர் மண்ணில் மூகாசூரனை வதம் செய்தார்கள். அசுரனை அழித்து, உலகைக் காத்ததால் அவளுக்கு ‘மூகாம்பிகை’ என்ற திருநாமம் ஏற்பட்டதாக புராணம் கூறுகிறது.
மூகாம்பிகை கோயிலின் கருவறையில் இருப்பது ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். இந்த சுயம்பு லிங்கத்தை முதன்முதலில் வழிபட்டவர் கோல மகரிஷி ஆவார். இந்த லிங்கத்தின் நடுவே ஒரு தங்கக் கோடு (சுவர்ண ரேகை) ஓடுகிறது. இதன் ஒருபாதி மும்மூர்த்திகளையும் (சிவன், விஷ்ணு, பிரம்மா), மறுபாதி முப்பெரும் தேவிகளையும் (சரஸ்வதி, லட்சுமி, பார்வதி) குறிப்பதாக ஐதீகம்.

லிங்கத்தில், அம்பாள் அரூபமாகவே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். லிங்கத்தில் அரூப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக் கொண்டு வருவதற்கு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வந்து கடும் தவம் மேற்கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற தேவி, மூகாம்பிகை வடிவில் அவருக்கு காட்சி தந்தாள். சங்கரர் தனது மனக்கண்ணில் கண்ட தேவியின் வடிவத்தை அப்படியே சிலையாக வடித்து, சுயம்பு லிங்கத்திற்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்தார். இன்று நாம் தரிசிக்கும் நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்திய மூகாம்பிகை அம்மன் சிலை ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதே ஆகும். இங்கு இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரமும், ஆராதனையும் மட்டுமே நடைபெறும். அபிஷேகங்கள் எல்லாம் லிங்கத்திற்கு மட்டுமே நடைபெறுகிறது.
மூகாம்பிகை அம்மன், ஞானத்தின் வடிவமான சரஸ்வதி தேவியாகக் கருதப்படுவதால், கலை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் இக்கோயிலுக்குத் திரளாக வருகின்றனர். குழந்தைகளின் கல்வித் தொடக்கமான ‘வித்யாரம்பம்’ செய்ய இத்தலம் புகழ்பெற்றது. கோயிலுக்கு அருகில் ஓடும் சௌபர்ணிகா நதி, நூற்றுக்கணக்கான மூலிகைக் காடுகளைக் கடந்து வருவதன் காரணமாக, இதில் நீராடினால் தீராத நோய்களும், சருமப் பிரச்சினைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆதிசங்கரர் மூகாம்பிகை மேல் தவம் புரிந்து எழ முயன்ற போது, அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்துக் கொடுத்தாள். அன்றில் இருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த, ‘கஷாயத் தீர்த்தம்’ பருகினால் உடல் நலம் பெறும் என்பது நம்பிக்கை. சண்டி ஹோமம் போன்ற சக்திவாய்ந்த யாகங்கள் இங்கு நடத்துவதன் மூலம் எதிரிகள் தொல்லை நீங்கி, நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும் நம்பிக்கை.

