விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள  அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஒருமுறை பிரம்மதேவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமானின் சீற்றத்தால் பிரம்மனின் ஒரு தலை கொய்யப்பட, அந்த பிரம்மனின் கபாலம் (தலை) சிவபெருமானின் கரத்தில் ஒட்டிக்கொண்டது. மேலும், ‘கபாலன்’ என்ற பூதம் சிவபெருமானைப் பின்தொடர்ந்து சென்று, அவர் பிச்சையெடுக்கும் உணவை எல்லாம் உண்டு அவரைப் பட்டினி போட்டது.

இதனால் சிவபெருமான் கபாலத்துடன் மயானங்களில் அலைந்து திரிந்தார். பார்வதி தேவி, சிவபெருமானின் சாபத்தைப் போக்க விஷ்ணுவின் ஆலோசனைப்படி மேல்மலையனூரில் ஐந்து தலை நாகமாக புற்றில் அவதாரம் எடுத்தார். அதன்பின் பார்வதி தேவி, கபாலன் உணவை உண்ணும் சமயம் விஸ்வரூபமெடுத்து அவனைத் தனது வலது காலால் மிதித்து அடக்கினார். இதனால் சிவபெருமானின் தோஷம் நீங்கி, மீண்டும் சாந்தமடைந்தார். சிவபெருமான் சாபம் நீங்கி ஆனந்தமாக சிதம்பரம் சென்றதால், இங்குள்ள ஈசன் தாண்டேஸ்வரர் என்றும், பார்வதி அங்காள பரமேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பில்லி, சூனியம், மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, புற்று மண்ணை பிரசாதமாக எடுத்துச் சென்றால் குணமடைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் மயாணக் கொள்ளை விழா புகழ்பெற்றதாகும். இதேபோல் மாதம் தோறும் அமாவாசை இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி அம்மனை வழிபடுகின்றனர். அப்போது அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலிப்பார். இன்று  ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு இன்று இரவு 10மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

ஏராளமான பக்தர்கள் ஆலயத்துக்கு அம்மனை வழிபட வருகின்றனர். அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version