ஆண்டுதோறும் ஆனிமாத வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் ‘ஆஷாட நவராத்திரி’ அல்லது ‘வராஹி நவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். எதிரிகளை அழிக்கவும், தடைகளை நீக்கவும், சகல ஐஸ்வர்யங்களைப் பெறவும் இந்த நாட்களில் பக்தர்கள் அம்மனை மனமுருகி வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான (2026) ஆஷாட நவராத்திரி ஜூலை 15ம் தேதி தொடங்கி, ஜூலை 23ம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் ஆஷாட நவராத்திரி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக ஜூலை 13ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. அன்றைய தினம் வராஹி தேவிக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
14ஆம் தேதி மஞ்சள் அலங்காரத்துடன், 15ஆம் தேதி குங்கும அலங்காரத்துடன்ம் வராஹி தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 16ம் தேதி சந்தன அலங்காரத்துடன் காட்சி அளித்த வராஹி தேவி 17ஆம் தேதி தேங்காய்பு அலங்காரத்துடனும், 18ம் தேதி மாதுளை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். 19ம் தேதி (இன்று) நவதானிய அலங்காரத்துடன் காட்சியளித்த வராஹி தேவியை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாளை (20ம் தேதி) வெண்ணெய் அலங்காரம், 21ம் தேதி கனிவகை அலங்காரம், 22ம் தேதி காய்கறி அலங்காரம், 23ம் தேதி புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது.
ஆஷாட நவராத்திரி நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை வராகி ஹோமமும், காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன
