திருவண்ணாமலை அருகே 100 ஆண்டு பழமையான பச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டம் தளவாநாயக்கன்பேட்டை செய்யாறு கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மன்னார் சுவாமி உடனுறை ஸ்ரீ பார்வதி அம்சமான அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலில் 104-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
அம்மன் வீதியுலா மற்றும் நேர்த்திக்கடன் விழாவை முன்னிட்டு, பம்பை, உடுக்கை மற்றும் மேள தாளங்கள் முழங்க பூங்கரகம் மற்றும் உற்சவ அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து, கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் முதலாவதாக பூங்கரகம் இறங்கியது.
பின்னர், காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் கைகளில் வேப்பிலை மற்றும் எலுமிச்சைக் கனிகளை ஏந்தியபடி ஈர ஆடை உடுத்திக் கொண்டு தீ மிதித்துத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
பூங்கரகம் ஏந்தி முதல் சுற்று தீக்குண்டத்தில் இறங்கியபோது, பூங்கரகம் எடுத்து வந்த பக்தர் திடீரென நிலைதடுமாறி நெருப்பில் விழுந்தார்.
அவர் விழுந்ததால், அவரைப் பின்தொடர்ந்து வந்த சில பக்தர்களும் தடுமாறி விழுந்தனர். இதில், பூங்கரகம் எடுத்து வந்த பக்தரின் இடது கணுக்காலில் தீக்காயம் ஏற்பட்டு தோல் உரிந்தது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, அடுத்த இரு சுற்றுகளுக்குப் பூங்கரகம் தீக்குண்டத்தில் இறங்காமல் குண்டத்தின் கரையோரத்திலேயே சுற்றிச் சென்றது. இதனால், திருவிழாவில் ஏதேனும் “தெய்வக் குத்தம்” நிகழ்ந்துவிட்டதோ என எண்ணி பக்தர்கள் மத்தியில் பெரும் குழப்பமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
இத்திருவிழாவானது இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள் ராஜசேகர், போளூர் ஆய்வாளர் சத்யா மற்றும் கலசபாக்கம் ஆய்வாளர் நடராஜன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
