உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி மற்றும் வைகாசி மாத விசாக திருவிழா ஆகியவை விமர்சையாக நடைபெறும். இந்த விழா காலங்கைல் 10 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகத்துக்குரிய புனித நீர், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுத்து வரப்படும்.
நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 30-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த 10 நாட்கள் திருவிழாவிலும் காலை 10 மணிக்கு நடைபெறும் அம்மனுக்கு அபிஷேகத்திற்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுத்து வரப்படும். முதல் நாளான இன்று எடுத்துவரப்பட்ட புனித நீருக்கு பூஜைகள் நடத்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இந்த புனித நீர் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
